Saturday, January 11, 2020

ரிக்வேதமும் ஆழ்வார்களும்

உணர்வுகளும், இதய பூர்வமான பக்தி எழுச்சிகளும் ரிக்வேத காலம் தொட்டு இன்றுவரையில் பக்திப் பாடல்களில் ஒரே மாதிரியாகத்தான் திகழ்கின்றன. இந்த உண்மையைச் சொன்னால் யாருக்குப் புரியப் போகிறது! பஞ்ச பூதங்களே! நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் என்று காவிய கவிகளின் பாணியில் சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். பரம்பொருளை அன்னையாகப் பாடுகின்ற ஒரு ரிக் மந்திரம். என்ன வெள்ளமென பக்தி பொங்க வார்த்தைகள்! ‘தவ சர்மந் ப்ரியதமே ததாநா’ என்று சொல்லும் போது உள்ளம் குழையாதோ உன் அடியில் என்று மனம் பராவுகிறது.

வாஸுதேவ தருச் சாயா - என்று வருகிறது திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியின் வியாக்கியானத்தில். ஆத்மாவிற்கு என்று ஒரு நிழலும் உண்டு. வெயிலும் உண்டு. ஆத்மாவிற்கான நிழல் வாசுதேவனின் அடிநிழல். வாசுதேவனாகிய மரத்தின் நிழல். அந்த நிழல் எப்படி இருக்கும்? எப்பேர்ப்பட்ட ஸம்ஸார வெப்பத்தையும் இருந்த சுவடும் தெரியாமல் போக்கும் ஒரே நிழல். ஆத்மாவிற்கான வெயில் எது? அதுதான் ஸம்ஸாரம் ஆகிய உலகியல் ஈடுபாடு.

நாமெல்லாம் நம் ஆத்மாவை வெய்யிலிலே போட்டு நிழலில் ஒதுங்காமல் ஓடுகிறோம் என்கிறார் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை. இந்த உருவகத்தை ரிக்வேதமும் பேசுகிறது. இதே பொருளில்.

‘தவ சர்மந் ப்ரியதமே ததாநா
உபஸ்தேயாம சரணம் ந வ்ருக்ஷம்’

உன் காப்பே எமக்குப் புகலாக்கி நாங்கள் உன்னை நாடுகிறோம் மரத்தை நிழலுக்காய் நாடுவது போல் - என்பது இதன் பொருள்.

ஸாயண பாஷ்யம் - தவ - த்வதீயே; சர்மந் - சர்மணி; ஸுகே ததாநா நிதீயமாநா: ஸந்த: சரணம் ந வ்ருக்ஷம் ஆச்ரயபூதம் வ்ருக்ஷம் இவ உபஸ்தேயாம| த்வாம் உபதிஷ்டேம| ஸங்கச்சேமஹி

உன்னுடைய சுகமான பாதுகாப்பிற்காக நாங்கள் உன்னிடம் சரணம் புகுகிறோம். மரத்தைத் தங்கும் நிழலிடத்திற்காக அண்டுவதைப் போல். நீ எங்களுக்கு நிழலும் புகலும் தரும் மரமாகின்றாய். நாங்கள் ஒன்று கூடி உன்னைச் சரண் எய்துகிறோம். - என்று அன்னையிடம் வேண்டும் மந்திரம்.

***

No comments:

Post a Comment