Saturday, January 11, 2020

யஜுர்வேதமும் ஆழ்வாரும்

யஜுர்வேதம் வாஜஸநேயி ஸம்ஹிதையில் ஒரு மந்திரம் வேநர் என்னும் பண்டிதவரிஷ்டர் இந்த ரஹஸ்யத்தைக் கண்டார் என்று சொல்கிறது மந்திரம். என்ன ரஹஸ்யம்? பிரஹ்மம் என்னும் பெரும் உண்மைக்குள் இந்த விச்வம் அனைத்தும் ஒரே வீட்டில் புகலடைந்தது போல், ஒரே தங்குமிடத்தில் ஒன்றுற இருக்கிறது என்று கண்டார். மேலும் வேநர் சொன்னாராம்: இந்த விச்வம் அனைத்தும் பரமாத்மாவில் குறுக்கும் நெடுக்கும் ஊடுபாவு ஓட்டினது போல் முற்றிலும் பிரஹ்மமே ஆகி நிற்கிறது என்று. அதாவது ஒரு வலை போன்று.

ஆனால் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பேசியிருக்கின்றார்கள். அது போல் ஆழ்வார்கள் பேசியிருக்கின்றார்கள். ஸுதந்து: , தந்துவர்த்தன: என்று இரண்டு திருநாமங்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உண்டு எனச் சொல்கிறது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.

ஸுதந்து: அழகிய வலை,
தந்து வர்த்தன: - வலையை வளரச் செய்வோன், பெருகச் செய்வோன். அல்லது பெருகிய, வளர்ந்த, நீளும் வலையே அவன் என்கிறது.

யோசித்துப் பாருங்கள் - GOD IS A WEB and that too A WEB THAT IS GOING STRONGER AND STRONGER.

ஆழ்வாருடைய பாடல் -

தன்னுள்ளே திரைத்தெழும்
தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து
அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து
நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற
நீர்மை நின்கண் நின்றதே.
(திருச்சந்தவிருத்தம்)

யஜுர்வேத மந்திரம்:

வேநஸ்தத் பச்யந் நிஹிதம் குஹா ஸத்
யத்ர விச்வம் பவத்யேக நீடம் |
தஸ்மிந் இதம் ஸம் ச வி சைதி ஸர்வம்
ஸ ஓத: ப்ரோதச்ச விபூ: ப்ரஜாஸு ||

இதற்கு உவடர் வியாக்கியானத்தில் - வேநஸ் தத்பச்யத் - என்பதற்கு ‘வேந: பண்டித: விதித வேதாந்த ரஹஸ்ய: ஸத்பாவநயா தத்ரூபம் ப்ரஹ்ம பச்யத் பச்யதி’ என்கிறார். வேதாந்த ரஹஸ்யத்தைப் பார்க்கத் தெரிந்தவரே பண்டிதர் எனப்படுவார். வலை என்பதைப் பற்றிச் சொல்லும் போது வலையில் ஓத: ப்ரோத: என்று ஊடு பாவு என்று வருகிறதே அது என்ன? என்று விளக்குங்கால் மிக அழகாகச் சொல்லிவிடுகிறார் உவடர். சரீர சரீரி பாவத்தை. மஹீதரரும் இவ்விடத்தில் இவ்வண்ணமே விளக்கியிருக்கிறார்.

உவடரின் வார்த்தைகள் - ஸ ச பரமேச்வர: ஓதச்ச சரீரபாவேந ப்ரோதச்ச ஜீவ பாவேந இதரதா வா விபூ: விபவதி ச கார்யகாரணபாவேந ப்ரஜாஸு.

சரீரபாவத்தால் ஓதமாகவும், ஜீவபாவத்தால் ப்ரோதமாகவும் மிடைந்த வலையாக இருப்பது விச்வம். கூடவே கார்யகாரண பாவத்தால் பிரஜைகள்.

திருமழிசையாழ்வாரின் பாசுரம் நேர் இந்த மந்திரத்தின் தமிழாக ஒலிக்கிறது எதைக் காட்டுகிறது? வேத காலம் என்று ஒன்றும், பக்தி காலம் என்று ஒன்றும் எல்லை பிரியாமல் ஒரே போகியாக அன்றோ இருக்கிறது உள்ளபடிப் பார்த்தால்!

***

No comments:

Post a Comment