மனிதரின் வாழ்க்கையின் பாங்கு எப்படி அறிவு முதிர்ச்சியுறும் என்பதை நன்கு புரிந்துகொண்டுள்ள காரணத்தால் அவ்வவர் பான்மைக்கேற்ற வழிகளை ஹிந்துமதம் யாத்து வைத்துள்ளது. முக்கியமாக ஜீவனின் இயல்பில் இருக்கும் அறிவுத் தன்மை, விரும்பும்தன்மை, செயலாற்றும் தன்மை ஆகிய ஜ்ஞாந, இச்சா, க்ரியா சக்திகளின் அடிப்படையில் நான்கு யோகங்களை வகுத்து வைத்தது. அறிவின் வேட்கை மீதூர்ந்த தன்மையருக்கு ஞான விசார மார்க்கத்தையும், உள்ளத்துணர்ச்சிகளில் ஆழ்வோருக்கு பக்தியின் ஈடுபாடான வழியையும், தீவிரமான மனப்பயிற்சிகள், உடல் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகள் ஆகியன மூலம் தம் அனுபவத்தில் நிதர்சனமான நிரூபணம் பெற வேண்டும் என்று நினைப்போர்க்குத் தாரணை, தியானம், சமாதி நிலை ஆகிய வழிமுறையையும் ஹிந்து மதம் கூறுகிறது. ஜ்ஞாந யோகம், பக்தி யோகம், ராஜ யோகம் என்று முறையே அழைக்கப்படும் இந்த நெறிகள் அனைத்துமே ஆன்மிக முன்னேற்றத்தையும், தாமே அனுபவித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடிய ஆன்மிக நிலைகளையும் ஒருவர்க்கு அளிப்பதற்குத்தான் ரிஷிகளால் செவ்வனே அமைக்கப்பட்டன.
அறிவு, உணர்ச்சி, உளப்பயிற்சி என்னும் வழிகளைப் போலவே, இன்னொரு வழியும் உண்டு. அதுதான் ஜீவனின் செயலாற்றும் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. செயல் தீவிரம் மிக்க மனப்பான்மை கொண்டவர் பார்வையில் மனிதன் கர்மம் ஆற்றும் வல்லமை மிக்கவன். உலகில் எத்துணையோ துயரங்கள் இருக்கின்றனவா? மனிதன் செயல் எடுத்துச் செய்தால் அவை மாறப்போகின்றன. ஊர் ஒழுங்கு சரியில்லையா? மனிதர் பலர் கூடிக் கலந்து முறையாகத் திட்டமிட்டு மாற்று நடவடிக்கைகள் செய்தால் அதை மாற்றிவிடலாம். செயல், செயல் செயலிலிருந்தல்லவா இந்த உலகம் தோன்றுகிறது! அப்பொழுது ஏதாவது உலக காரணமான வஸ்து என்று ஒன்று இருந்தால் நாம் செயல் ஆற்றுவதன் மூலம் அல்லவோ அதை உணர இயலும்! கர்மத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை கர்மம் ஆற்றுவதன் மூலம் தானே கடந்து போய் உணர முடியும்! ஏன் இந்தச் செயலே அந்தப் பெரும் தத்துவமாக இருக்கக் கூடாது? ஆதி முதல் இந்தக் கணம் வரையில் அனைத்தையும் இயக்கும் தத்துவம் இந்தச் செயல்தானே? பிரபஞ்சப் பேரியக்கமான மஹா செயல் வடிவத்தோடு நம் செயலே உருவான வாழ்க்கை ஒன்று கலக்கும் போதல்லவா நாம் அந்தப் பிரபஞ்சப் பேரியக்கத்தில் பங்கு கொள்வோம்? அப்பொழுதுதானே நாம் இந்தப் பெரும் கர்ம ஆகாரத்தில் ஓர் அங்கமாக நம்மை உணர்வோம். அதற்கு நமக்குத் தடையாக இருக்கக் கூடியது நமது அகங்காரமும், என்னுடையது என்ற மமகாரமும் அன்றோ! இந்த நான், என்னுடையது என்ற இரட்டையைத் தியாகம் செய்து என் கர்மங்களை, என் செயல் அனைத்தையும் பிரபஞ்ச இயக்கத்திற்கு அர்ப்பணம் என்று கருதிச் செய்தால், கர்ம யோகமாகச் செய்தால், அதுவன்றோ உயர்ந்த நிலை.
நான், எனது, என்னுடல், என் சுகம், என் வாழ்க்கை என்ற குறுகிய கண்ட நிலையிலிருந்து பிரபஞ்சப் பேரியக்கத்தோடு ஒன்றிய அகண்டத்திற்குப் போவதுதானே என் இயல்பான ஆன்மிக முன்னேற்றம்? மனிதன் தான், தனது என்ற இரட்டைகளில் மாட்டிக்கொண்டு கர்மங்கள் புரிந்தால் அவனை அந்தக் கர்மங்கள் பந்திக்கின்றன. அதனால் அவன் அவதியுறுகிறான். நல்ல வாய்ப்பைக் கெடுத்துக் கொண்டு வியர்த்து விறுவிறுத்து, ஐயோ இவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறதே என்று அவதிப்படுகிறான். ஆனால் தான் தனது என்ற இரட்டைகளை விட்டுத் தன் கர்மங்கள் எதுவாயினும் அவற்றை கர்ம யோகமாகச் செய்யக் கற்றவன் அமுதம் என்பதை அக்கணத்திலேயே உண்பவனாக அல்லவோ ஆகிவிடுகிறான்! இது கர்ம யோகியின் மன நிலை.
"கர்ம யோகம் ஒன்றே
உலகில் காக்கும் என்னும் வேதம்"
என்கிறார் பாரதி.
கர்மங்களைத் துறந்துவிடுவதை விட நான் எனது என்ற இரட்டையை அகற்றிக் கர்மத்தை யோகமாகச் செய்யும் கர்ம யோகம் உயர்ந்தது என்று கூறுகிறார் ஸ்ரீகிருஷ்ணர். ஆனால் எந்த வழியும் அத்தனை பேருக்கும் பொதுவான வழி என்று இருக்க முடியாது என்பதுதான் ஹிந்து மதம் காலம் காலமாக கண்ட அனுபவக் கருத்து.
ஆகமங்கள் காலத்திலிருந்தே ஒரு நல்ல வழி கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதாவது கர்ம யோகமா? ஞான யோகமா? என்ற இதுவா அதுவா என்ற கேள்விக்குப் பதிலாக, கர்மம், ஞானம், பக்தி, தியானம் என அனைத்து மார்க்கங்களையும் ஆன்மிக நெறியில் கூட்டிவைத்தல் என்னும் வழி ஆகமங்கள் காட்டுகின்றன. இந்தக் கூட்டு வழியில் பொதுவாக கர்ம யோகம் என்பதால் சித்த சுத்தி ஏற்படுகிறது என்ற கருத்து கொள்ளப்படுகிறது. கர்மங்களைக் கர்மங்களாகச் செய்யும் போது கர்ம பலன்களில் தீவிர நாட்டம் இருக்கும். நான் செய்கிறேன், எனக்காகச் செய்கிறேன் என்ற அகங்கார மமகாரங்கள் இருக்கும். அதனால் சித்தம் பலப்பல அக்கறைகளாலும், கவலைகளாலும் அலைப்புண்ணும். அவ்வாறு சித்தம் கலங்குவதை சித்தத்தின் அசுத்தி என்பர். மேலும் சித்தம் தானாக மனத்தடத்தில் நினைவுகளை ஏற்படுத்தவல்லது. அதனால் சித்தம் அகங்கார மமகாரத்தனமான நினைவுகளையே ஏற்படுத்தும் வரை தெளியாமல் இருக்கிறது என்று அர்த்தம். அதனால் கர்ம யோகத்தால், அதாவது கர்மங்களை அகங்கார மமகாரங்கள், கர்ம பலனில் கவலை என்பதெல்லாம் இல்லாமல், கர்மத்தையே ஒரு யோகம் போலச் செய்வதால், சித்தம் தெளிவு நிலை அடைந்து ஆன்ம உணர்வு மனத்தில் நன்கு எழுவதற்குத் துணை செய்யும். உலகில் பலருடைய வாழ்க்கை நிலைகளை நோக்கினால் இந்த வழிதான் பெரும்பயன் விளைக்கக் கூடியது என்பது சொல்லாமலே போதரும். பெரும்பாலான மக்களுக்கும் ஏற்றதும், உலக நடைமுறைக்கு ஒவ்வினதும் இந்த வழியாகும்.
***
No comments:
Post a Comment