‘மண்ணொடு மண்ணார் போனார்
வளியொடு வளியார் போனார்
தண்ணொடு தண்ணார் போனார்
தழலொடு தழலார் போனார்
விண்ணொடு விண்ணார் போனார்
விளங்குஅறி வுருவாய் நின்ற
நுண்ணிய நானே யெங்கும்
நுழைந்திடா திருக்கின் றேனே’.
இந்த நிலை துரியம் என்னில் திரியாதீதம் யாவது என்றால் --
’இந்நிலை துரிய மாகும்
என்றரு மறைகள் கூறும்
இந்நிலை நின்றோ மென்னும்
எண்ணமும் கடந்து போன
அந்நிலை துரியா தீதம்
ஆகுமென் றறைவர் நல்லோர்
அந்நிலை தனக்கு மேலோர்
நிலையிலை அறையுங் காலே’
அதாவது இதெல்லாம் நமது இயல்பு நிலை. ஆனால் இது நமக்கு எவ்வளவு அந்நியமாகத் தெரிகிறது!. நிச்சயம் ‘ஏன் இவர் வேலை மெனெக்கெட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறார்’ என்று ஓர் எண்ணம் உங்கள் மனத்தில் கிராஸ் ஆகாமல் போகாது. இந்நிலை நமக்கு இயல்பாகவும், இப்பொழுது நாம் மயங்கிக் கிடக்கும் நம்முடைய இப்பொழுதைய நிலை அந்நியமாகத் தெரியும் காலத்தில் நாம் என்ன சொல்வோம்? ‘நெனச்சேன் சிரிச்சேன்’ என்று சொல்வோமோ?
*
ஆகாசாத் பதிதம் தோயம் - என்று வானின்றிழி நீரும் விரிகடலைச் சேர்வதொப்ப அனைத்து வழிபாடுகளும் ஒரே பரம்பொருளைச் சென்றடையும் என்னும் கருத்தைச் சொல்லாத பாரத சம்ப்ரதாயங்கள் இல்லை. ஸ்ரீசிவமஹிம்ந ஸ்தோத்திரத்தில் ஸ்ரீபுஷ்பதந்தரும் பயஸாம் அர்ணவ இவ என்று இதே ஆறுகள் கடல் புகும் உவமையினால் சொல்கிறார். ஸ்ரீசிவஞான வள்ளலாரும் வள்ளலார் சாத்திரத்தில் இதே கருத்தைச் சொல்லும் விதம் ஒரு தனி அழகு!
’வேறு வேறாகி ஓடும்
விரிநதிக் குலங்க ளெல்லாம்
கூறு முன்னீரின் ஒன்றாம்
கொள்கை யதாகு மாபோல்
வேறு வேறாகி நின்ற
விதிவழிச் சமய மெல்லாம்
கூறுமுத் தியினில் ஒன்றாம்
கொள்கை யதாகு மன்றே.’
*
என்னமோ சொல்றீங்க, ஆன்மா ஆன்மா என்று. எனக்கும் ஒன்றும் புரியவில்லை சாமி. சரி அந்த ஆன்மாவின் இயல்புதான் என்ன சொல்லுங்க என்றால் ஸ்ரீசிவப்பிரகாச வள்ளலார் உரைக்கும் விதம் அலாதி -
இந்த ஆன்மா எதனோடும் கலந்துகட்டி அன்று. கேவலன். இந்த ஆத்மா ஒரு நாளும் அழுக்கு அடைவதில்லை. எப்பொழுதும் சுத்தன். எந்த ஒன்றும் இவனை அலைக்கழிப்பதில்லை. இவன் எப்பொழுதும் சாந்தன். நீங்கள் நுண்ணியது, நுட்பம் என்று எவ்வளவு மிக நுண்ணிய அளவில் சொன்னாலும் அதற்கெல்லாம் எட்டாத அளவு இந்த ஆன்மா சூக்குமன். சதாசர்வ காலத்தும் மாறாமல் இருக்கும் சனாதன். அதற்கு என்று என்றும் பழமைப் படாதவன். அதனால் கிளர் சனாதன். பாவம் என்பது கிஞ்சித்தும் இவனுக்கில்லை. அதனால் முழு ஆனந்தன். பாவமில் சர்வானந்தன். அனைத்து பொருட்களையும், நிகழ்ச்சிகளையும், உள்ளும் வெளியும் இவன் சாக்ஷியாய் இருந்து பார்க்க எல்லாம் நடக்கின்றன. ஆனால் இவனை எந்த சாக்ஷியும் கண்காணப் பார்த்து பகர முடியாது. பகரரும் சர்வ சாக்கி. இவன் மேலாந்தன்மை சித் என்னும் மாத்திரமேயாய் இருப்போன் மேவு சின்மாத்திரத்தன். இவ்வளவு என்று அளவற்ற சுக சொரூபன், மிகுசுகசொரூபன்.
‘சீவனாம் இந்த ஆன்மா
இயற்கையைத் தெரிக்கும் காலைக்
கேவலன் சுத்தன் சாந்தன்
சூக்குமன் கிளர்ச னாதன்
பாவமில் சர்வா னந்தன்
பகரரும் சர்வ சாக்கி
மேவுசின் மாத்தி ரத்தன்
மிகுசுக சொரூப னாமால்.’
***
No comments:
Post a Comment