அறநெறிச் சாரம் ஓர் அதிர்ச்சியைத் தருகின்றது. அந்தக் காலத்திலேயே ஸ்ரீரமணர் இருந்தாரோ! எந்தக் காலத்தும் இருக்கும் ஒன்றாகத்தானே இருந்தார் ஸ்ரீரமணர்!
தெய்வம் எது என்று அறநெறிச் சாரத்திடம் கேட்டால் என்ன சொல்கிறது? தான் தானப்பா தெய்வம் என்பது. என்னது? ஆம். அது தொடர்ந்து சொல்கிறது. இந்த மனம் என்ற ஒன்று இருக்கிறதே அது அழிந்துவிட்டால், பின்னர் தான் என்பதுதான் தெய்வம். உடம்பின் கண்ணைக் கண் என்று போற்றாமல் ‘எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்’ எனும் ஆன்றோர் மொழியை நன்கு புரிந்துகொண்டு முட்டறுத்த மொழித்திறன், அளவை இயலின் நியமம் ஆகிய கண்களை ஒருவன் நன்கு வாய்க்கப் பெற்றால், ..அவ்வளவுதானா?... இரு அப்ப... இந்தக் கண்ணைக் கொண்டு இவன் ஒன்றை நோக்க வேண்டும் அன்றோ! என்ன? இருமையும் கண்டு ஆங்கு, இம்மை, மறுமை, நன்மை தீமை, புண்ணியம், பாவம் என்ற இரட்டைகளின் தன்மையை நன்கு கண்டு .. பின்னர்?... ஆங்கு... சற்றும் விலகாமல் அருளின் பக்கத்திலேயேஏஏஏஎ நிற்பது அறிவு. அந்த அறிவினால் பார்த்தால் மனம் ஒழிந்த தான் போன்ற தெய்வம் இல்லை.
’தன்னொக்கும் தெய்வம் பிறிதில்லை தான்தன்னைப்
பின்னை மனமறப் பெற்றானேல் - என்னை
எழுத்தெண்ணே நோக்கி இருமையும் கண்டாங்கு
அருட்கண்ணே நிற்பது அறிவு.’
ஆழநெடுங்காலமாக வேதாந்தக் கல்வி சிறந்தது நம் தமிழ்நாடு அன்றோ!
*
ஓர் இருட்டு வழி! கடக்க கைவிளக்கு ஒன்று வேண்டும். அந்தக் கைவிளக்கில் நவீனம் என்னில் பாட்டரி வேண்டும். பழையது என்னில் எண்ணை வேண்டும். எல்லாம் இருந்தாலும் வழியில் நடப்பவர் கோணாமல் நேரே நடக்க வேண்டும். இதை ஓர் எழிலான கவிதையாக்கிவிட்டது அறநெறிச் சாரம்.
‘இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை கைவிளக்கின்
நெய்யே தன்நெஞ்சத் தருளுடைமை நெய்யமைந்த
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா
மேலுலகம் எய்து பவர்.’
இந்த உலகத்து இயற்கை இருள். மெய்ப்பொருளைக் காட்டாது மறைக்கும். மெய்ப்பொருள் காணவேண்டும் என்னில் முதலில் அறிவு வேண்டும்; அதிலும் கற்ற அறிவு வேண்டும். அதுதான் கைவிளக்கு. அந்த விளக்கில் இடும் எண்ணை அல்லது பாட்டரி, என்ன? நெஞ்சத்து அருள். விளக்கின் ஒளியில் இருளைக் கடக்க நன்னடை, ஒழுக்கம் வேண்டும். அவர்கள்தாம் பரிவு =துன்பம் என்பது இன்றி மேல் உலகம் எய்துபவர்கள்.
***
No comments:
Post a Comment