Saturday, December 7, 2019

நல்லார் இணக்கம் ஏன்?

வேத சிரேணி சிதம்பர சுவாமிகள் செய்த உபதேச உண்மை என்னும் நூல் வேதாந்தத்தின் பிழிவாக இருக்கிறது. சாதுசங்கம் ஏன் தேவை? ஞான நூல்களை ஏன் கற்க வேண்டும்? ஞான நாட்டம் கொள்வது ஏன்? விசாரம் புரிந்து ஏன் வாதம், பிரதிவாதம் ஐயம், தெளிவு என்று ஏன் ஆத்ம சாதனையில் ஈடுபட வேண்டும்? அனைத்து நூல்களும் சொல்லிய சொல். சொல்லாச் சொல் ஒன்றே. அது பரம்பொருள். அதை ஏன் அறிய வேண்டும்? எல்லாவற்றையும் ஏன் செய்ய வேண்டும் என்று விளக்கும் பாடல் -

’நல்லார் இணக்கம் செய்வதுவும்
ஞான நாட்டம் கொள்வதுவும்
கல்லா வனைத்தும் கற்பதுவும்
கனத்த விசாரம் புரிவதுவும்
சொல்லாச் சொல்லை அறிவதுவும்
சுகமாய் வாழ நினைப்பதுவும்
எல்லா மாயல் லவுமாகி
இருந்த சாக்ஷி ஆவதற்கே.’

சாக்ஷி என்றால்? பார்க்கப்படுவது எல்லாம், அறியப்படுவது எல்லாம் திருசியம். அறிவோன் என்பது திருக். திருசியத்தை விட்டுத் திருக்காய் நிற்பது என்பதுவே சாக்ஷியாய் இருப்பது.

’உன்னால் அறியப் படும்பொருட்கள்
உன்னை யறிய மாட்டாதால்
உன்னால் அறியும் பொருளெல்லாம்
உனக்கு விடய மாம்கண்டாய்
உன்னால் அறியும் பொருளழியும்
ஒருகா லமும்நீ அழிவதிலை
உன்னால் அழியும் பொருளைவிடுத்து
உன்னை விசாரித்து அறிவாயே.’

*** 

No comments:

Post a Comment