1881ல் தஞ்சாவூரில் சின்னகன்னைய செட்டியார் என்பவர் சகலகலாநிலையம் என்னும் அச்சுக்கூடம் வைத்திருந்திருக்கிறார். அதில் திருமயிலை வைதிலிங்க தேசிகர் பார்வையிட்டு, திருத்தணிகை சித்தையர் அவர்களால் வேதசிரேணி சிதம்பர சுவாமிகள் அருளிச் செய்த தண்டபாணி பேரில் பதிகமும், உபதேச உண்மையும், உபதேச உண்மைக் கட்டளையும் ஒரு நூலாகப் பதிப்பிக்கப்பட்டது 1881ல். அதில் ஒரு பாடல், எப்படி எல்லா வழிபாட்டினரும் தங்கள் உட்சாரமாக உபநிடத ஞானம் என்பதைப் போற்றினர் என்று காட்டும் பாடல்.
’தத்துவம் தொண்ணுற் றாறையும் கழித்துத்
தத்துவம் எனும்இரு பதமும்
கொத்தற விடுத்தங்கு அசிபதப் பொருளைக்
குடங்கையில் கனியென அருளும்
சித்தனே உன்றன் திருவடிக் கடியேன்
சேருநாள் எந்தநாள் புகலாய்
முத்தனே வேத சிரேணிவாழ் பரனே
முதல்வனே தண்டபா ணியனே.’
தொண்ணுற்றாறு தத்துவத்தையும் கழித்தபின், தத் + த்வம் என்னும் இருபதத்தையும் தெளிவுற விளக்கினதைக் குறிப்பிடுகிறார். தத்துவமஸி என்னும் வேதாந்த மகாவாக்கியத்தில் மூன்று சொற்கள், தத், த்வம், அஸி என்று. தத் என்பது பரம்பொருள், த்வம் என்பது ஜீவன். அஸி என்பது உபதேசத்தில் நீ இவ்வாறு இருக்கிறாய் என்ற தெளிவைக் குறிப்பதாகும். தத் என்பதற்கும் த்வம் என்பதற்கும் என்ன சம்பந்தம்? அந்த ‘தத்’ ஆகிய பரம்பொருளாக ஏ ‘த்வம் ‘ ஆகிய ஜீவனே நீ அதுவாக இருக்கிறாய் (அஸி) என்பது உபநிடதம் கூறும் உபதேசம். இதில் இருக்கப் போகிறாய் என்றாலாவது வேறு மாதிரி பொருள் கொள்ளலாம். இருக்கிறாய் என்றால் எப்படிப் பொருள் கொள்வது? எனவே வேதாந்த விசாரத்தில் மிகவும் கடினமான பகுதி இந்த அஸி என்னும் பதம் எப்படிப் பொருத்தம் உடையது என்று பலவேறு வழிகளில் வாதங்களின் மூலமும், திருட்டாந்தங்களாலும், பல ஐயங்கள், தெளிவுகள் மூலமும் காட்டி மனத்தில் நிச்சயம் வரும்வரை தர்க்கம் செய்து முடிவு காண வேண்டும். யாரோ சொன்னார் என்று நம்புவது அன்று வேதாந்தம். எல்லா மறுப்புகளையும் எழுப்பிக் கொண்டு அதற்கு விடைகளைக் கண்டு அலசிப் பின்னர் எழும் நிச்சய உணர்வுதான் சிரவணம் ,மனனம் சிந்தனம் என்னும் படிநிலைகளால் ஆகும் காரியம். பிறகு அந்த நிச்சயத்தை விடாமல் தியானிப்பது என்பதுதான் நிதித்யாஸனம். அந்த அஸி பதப் பொருளை அங்கை நெல்லிக் கனியெனத் தெளிவாகக் காட்டினான் சித்தனாகிய வேத சிரேணியில் எழுந்தருளியுள்ள தண்டபாணி என்கிறார் வேதசிரேணி சிதம்பர சுவாமிகள்.
***
No comments:
Post a Comment