Saturday, December 7, 2019

அறையில் ஒரு பொருள்!

அறையில் ஒரு பொருள்-- 

ஒரு திகில் கதை நாமும் சொல்லிப் பார்க்கலாம். ஒரு குரு சீடனிடம் கூறினார், ‘அந்த அறையில் ஒரு பொருள் இருக்கிறது பார்’. சீடன் போய்ப் பார்த்தான். ‘ஒரு பொருளும் இல்லையே’. ‘நன்றாகப் பார்’ என்றார். ‘இல்லைவே இல்லை ஐயா’ என்றான். ஆனால் அங்கு ஒரு பொருள் இருக்கிறது என்பது உண்மை. எப்படி? ஏன்?

இப்படி ஒரு திகில் கதையையே நடத்திவிடுகிறார் வேதசிரேணி சிதம்பர சுவாமிகள். இங்கு பாருங்கள் இந்தப் பாடல்களை --

‘அறையிலிருக்கும் பொருளெடுக்க
அறிஞன் ஒருவன் உட்புகுந்தே
அறையில் ஒன்றும் தெரியவில்லை
என்றே வெளியில் வந்தறைந்தான்
அறையில் பொருளுண்டு எனச்சொன்னேன்
இல்லை என்ற அதனை நீ
அறையில் கண்டதுண்டோ சொல்
என்றான் இதில் கண்டறிவாயே’

’அறையில் பொருளை எடுப்பதற்கே
அப்பா நுழைந்து பார்க்குமிடத்து
அறையில் என்ன கண்டாய் சொல்
அந்தோ இருளை விட வேறே
அறையில் பொருளும் கண்டிலனால்
ஐயா உனது திருவருளால்
அறையில் பொருள் ஈதெனக் காட்டி
அருளவேண்டும் எனக் கரைந்தான்’

இதற்கு மேல் திகில் வேண்டாம் என்று ஆசிரியர் அவனுக்கு விளக்கம் தருகிறார்:

‘அறையிலிருக்கும் பொருளொன்றே
அப்பா பரமப்பொருளாகும்
அறையிலிருக்கும் பொருள் தெரியும்
அதுவும் உன்றன் கண்ணாகும்
அறையிலிருக்கும் பொருள் இல்லை
என்ற அதுவே இருள் மலமாம்
அறையும் அந்த இருளகற்றி
அறையில் பொருளை அறியென்றான்.’

எனவே அறையில் பொருள் இருக்கிறதா என்று நீங்களும் ஒருதடவை செக் பண்ணிடுங்க! பல பொருட்கள் இருக்கின்றன என்று சொன்னால் அது அறியாமை. ஒன்றுமே இல்லை என்றால் அது உங்கள் அறிவின் இருள். இருப்பது ஒரே பொருள் என்பதைக் கண்டு பிடிப்பது உங்கள் அறிவின் வெற்றி - என்பதை எத்தனை இலக்கிய உத்தியாகச் சொல்லிவிட்டார் உபதேச உண்மையில் வேதசிரேணி சிதம்பர சுவாமிகள்!

***

No comments:

Post a Comment