Saturday, December 7, 2019

புறத்திரட்டில் ஒரு பழைய பாரத வெண்பா

இருள் இந்த உலகியற்கை; மெய்ப்பொருளை மறைக்கிறது. கற்ற அறிவும், கூடவே நெஞ்சத்து அருளும் ஆகிய கைவிளக்கு ஒழுக்கமுடன் கூடி இருளைக் கடக்கும் வழியாகும் என்று பார்த்தோம்.

‘இருள்தரு மாஞாலத்து இனிப்பிறவி யான் வேண்டேன்’ என்கிறார் ஆழ்வார்.

புறத்திரட்டில் உள்ள ஒரு பழைய பாரத வெண்பா ஒரு விதமாக இந்தக் கடக்கும் உபாயத்தைச் சொல்கிறது. இந்த உடலை ஓர் அகல்விளக்கு என்கிறது. இதில் பொருத்தப்பட்ட திரி பொறை அதாவது பொறுமை. ஆம் அது அபரிமிதமாக வேண்டியிருக்கிறது. அந்தத் திரி தோயும் நெய் அல்லது எண்ணை என்பது தவம். அப்பொழுது தவம் என்பது பொறுமையுடன் இணைந்து இயற்றப்பட வேண்டும். அந்தத் திரியில் தவத்தால் எரியும் விளக்கு, தீபம் என்பது அருளாம்.

இதில் தவம் என்பது என்ன? தீபம் ஆகிய அருள் யாது? தவம் என்பதே இருமைகளைப் பொறுத்து ஒப்ப நோக்கும் பக்குவம் பெறுதல். ‘ஸமத்வம் யோக உச்யதே’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணன். என்ன இருமைகள் அல்லது இரட்டைகள்? சுகம், துக்கம்; வேண்டியது வேண்டாதது; நான், எனது என்னும் இரட்டையையும் கடத்தல் பெரிய தவம்.

பாரத வெண்பா திரியில் தவத்தால் சுடரும் பிழம்பாக அருளைப் பேசுகிறது. அந்தக் கைவிளக்கைக் கொண்டு உலகியலைத் தாண்டிய அப்பாலைக்கு ஒருவன் செல்லுங்கால் இருள் என்பது மாறி வெட்ட வெளியாக ஆகிவிடுகிறது. ஒருவர் உலகியல் தன்மை மாறப் பெறுவதே அவ்வுலகம் போன்று உணரப்படுகிறது. ஆன்மிகத்தில் மனம் தோய்ந்து மாறப் பெற்றவர் தம் முந்தைய வாழ்வை கடந்துபோன பிறவிபோல் உணர்வதும் உண்டன்றோ! ஸ்ரீவைஷ்ணவத்தில் பிறப்பு என்பதே திருவெட்டெழுத்து என்னும் திருமந்திரத்தில் உணர்வு எழப்பெற்றுத் தம் உயிர் இயல்பு எழுவதேயாகும் என்றுரைப்பர். அதுகாரணம் பற்றியே ஆழ்வார் ‘அன்று நான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்’ என்றுரைக்கிறார். 

’மெய்தகளி யாகப் பொறையாம் திரிக்கொளீஇ
நெய்தவ மாக நிறைதரப் - பெய்தாங்கு
அருளாம் விளக்கேற்றி அம்மைப்பாற் செல்ல
இருள்போய் வெளியாய் விடும்.’

*** 

No comments:

Post a Comment